World Tamil Blog Aggregator Thendral

Monday, 21 August 2017

manam sudum thottakkal-மனம் சுடும் தோட்டாக்கள் நூல் வெளியீடு

காகிதம் பதிப்பகத்தின்
 "மனம் சுடும் தோட்டாக்கள். 
"ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " ,
"அழுக்கு தேவதைகள் "ஆகிய மூன்று கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 


புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில்சிந்துவெளி அமைப்பின் மூலம் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா 19.8.21 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ...

 வயலோசை முனைவர் பாலதண்டாயுதம் பாடலுடன் இனிமையுடன் துவங்கியது .

 வரவேற்புரை:

 கவிஞர் முனைவர் செல்வகுமாரி அவர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றார் ....

 வாழ்த்துரை

 திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை ,சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்து வாழ்த்தினார் .கவிஞர் முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் .


           கவிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நகைச்சுவையான வாழ்த்துரையால் அரங்கத்தை கலகலப்பாக்கினார் .

 நூல் வெளியீடு

                     புதுச்சேரி அரசு கொறடா திரு இரா.அனந்தராமன் அவர்கள் கவிஞர் தேவதாவின் "மனம் சுடும் தோட்டாக்கள் ", கவிஞர் மீரா செல்வகுமாரின் "ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " கவிஞர் ஆயுதாவின் "அழுக்கு தேவதைகள் " ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ..தமிழ் மேல் இருந்த அவரது பற்றை உணர்த்தும் வகையில் சிறப்பானதொரு வாழ்த்தை வழங்கினார் .

              நூல்களை பெற்று சிறப்பித்த தமிழ்மாமணி பூங்கொடி பாராங்குசம் அவர்கள் புதுச்சேரியில் பாவேந்தர் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற கவிஞர் புதுகை சிவம் அவர்களின் மகள் என்பது எனது நூலுக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றேன் .
 நூல் பற்றிய மதிப்புரை

 முனைவர் அவ்வை .நிர்மலா , கவிஞர் மு.பாலசுப்ரமணியன் மற்றும் கவிஞர் முனைவர் ப.இரவிக்குமார் ஆகியோர் நூல்களின் சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர் .
 தலைமையுரை

                     கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் புதுகைக்கும் புதுவைக்கும் பாரதிதாசன் காலத்திலேயே இருந்த உறவை அழகாக எடுத்துக்காட்டி கவிதை நூல்கள் குறித்தும் நூலாசிரியர்கள் குறித்தும்சிறப்புடன் உரையாற்றி புதுவை மக்களின் மனம் கவர்ந்தார் .

 நிறைவுப்பேருரை பேரா.முனைவர் .நா.இளங்கோ அவர்கள் தமிழ்க்கவிதையியல் வரலாற்றில் ,வளர்ச்சியில் இன்றையக் கவிஞர்களின் பொருத்தப்பாடு குறித்து நகைச்சுவையாக சிறப்புடன் பேசினார் .

ஏற்புரை

              நூலாசிரியர்களான கவிஞர் மீரா செல்வகுமார்
 கவிஞர் கீதா @தேவதா தமிழ் மற்றும் கவிஞர் ஆயுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர் .

 நன்றியுரை

                 பண்டிதர் சா.து.அரிமாவளவன் அவர்கள் நன்றி கூறினார் .

 நிகழ்ச்சி தொகுப்பு
                   திருமதி சுபாசினி அவர்கள் சிறப்புடன் நிகழ்வைத்தொகுத்தளித்தார் . 

விழாவிற்கு புதுச்சேரியின் இலக்கியவாதிகள், தோழர் தமிழ்நெஞ்சம் ஆகியோர் கலந்து   கொண்டு சிறப்பித்தனர் .                                 சென்னையிலிருந்து சகோ முரளி@Muralee Tharan ,சுபஸ்ரீ Subhasree Muraleetharan,காரைக்குடியில் இருந்து சகோ Kanmani Sundaramoorthy,திருச்சியில் இருந்து சகோ வி.சி. வில்வம் மற்றும் கியூபா ,செஞ்சையில் இருந்து தோழி Alli Ramadass,பாண்டிச்சேரியில் இருந்து தோழி Thanam Ragothaman மற்றும் வலைப்பதிவர் கலையரசி எனது அத்தை உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


                         விழா இத்தனை சிறப்புடன் அமையக்காரணமானவர்கள் அன்புநிறை பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும் பண்டிதர் சா.து. அரிமாவளவன் அவர்களும் தான் .எனை அறியாத புதுவையில் என்னை அறிமுகப்படுத்திய விதம் வாழ்வில் என்றும் மறக்கவியாலாது .... மனம் நெகிழ்ந்த அன்புடன் அவர்களை மறுநாள் பார்த்துகலந்துரையாடி வந்தேன் .... 

என் வாழ்வில் மறக்கமுடியாத விழா இது ...

 வாழ்த்து கூறிய அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும் ..

Thursday, 17 August 2017

மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாஅன்புடன் அழைக்கின்றோம்

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா...

நாள் 19.8.17 சனிக்கிழமை
காலம் மாலை 5 மணி
இடம் தமிழ் சங்கம் பாண்டிச்சேரி
தலைமை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கடற்கரை
மணல்வெளியில்
கவிதைகளை
விதைத்து விட்டு
கலைந்திடத்தான்
முதலில் திட்டம்..

புதுகைக்கும்
புதுவைக்கும்
பூர்வீக சொந்தம்
உண்டோ?
தங்க மனசுகள்
எம் கவிதைகளை
சங்கத்தில் வைத்து
ஆராதிக்கப் போகின்றன..

அப்பன் பாரதி
அவன் தாசன்
குரல்கள்
கேட்டிருந்த
குயில் தோப்பின்
மிக அருகில்..

முக்கவிஞர்
முத்தெடுத்த
கவிதைகளை
உங்கள்
அகம் சேர்க்க
ஆவலுடன்
அன்பின் விழா!!

அருமைப் பெரியோரே!
அன்புநிறை தோழர்களே!!

புதுவை
தமிழ்ச்சங்க வாசலிலே.

காத்திருப்போம்
கவிதைகளோடு
நாங்களும்.

வந்து சேருங்கள்...

Friday, 4 August 2017

தயாரா சென்னை

சென்னை நலமா
செல்லமாய் மென்மையாய் கேட்க
 பறக்கின்ற நகர்வில்
ஒரு நிமிடம் அது வார்தாவின் நினைவில்
ஓலமிட்ட அவலத்தை
உயிர் பறித்த உடலாக
உறைந்து உறைந்தது.

தயாரா சென்னை ...?
ஆட்டோ ஓட்டுநர்
ஆர்வமாய் தயாரென்க...

பாலத்தில் தொங்கியத் துயில்

அம்மாயியின் நடுக்கத்தையோ
அலறி இழுத்து சென்ற
அம்மாவின் கதறலையோ..
பிறந்து கண் விழிக்காமல்
மிதந்து மறைந்த மழலையின்
அழுகையையோ.......
எதை உறைத்து
படபடத்தது.....

Tuesday, 18 July 2017

மனம் சுடும் தோட்டாக்கள்

அன்புடன் அழைக்கின்றேன் .

எனது முன்றாவது கவிதை நூல் ....

புதுகை நூல் --------புதுவையில் உதயமாக உள்ளது ...

நாள் :19.8.17 -சனிக்கிழமை

இடம் :தமிழ் சங்கம். புதுச்சேரி .

"மனம் சுடும் தோட்டாக்கள்"

கவிதை நூல் வெளியீடு ...

அழைப்பிதழ் விரைவில் ..

Tuesday, 11 July 2017

எனது இரண்டாவது நூல் "விழி தூவிய விதைகள் "

எனது இரண்டாவது நூலும் முதல் கவிதை நூலுமான

"விழி தூவிய விதைகள்"

வளரி சிற்றிதழின்2015 [௨௦௧௫] ஆண்டிற்கான கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூல் ...எனது மனம் உடைந்த காலங்களில் கவிஞ்சர் சுவாதியின் தூண்டலால் பிறந்த நூல் ....இதில் மூழ்கியதால் என்னையே நான் மறந்து இந்நூலை பிரசவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் .

எனது கவிதைகள் இல்லை என் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கும் நூல் .இதில் தான் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உலா வரும் பெண்ணியக் கவிதை "எங்கே போவேன் "என்ற கவிதை வாழ்கிறது ...

வேலுநாச்சியார் பதிப்பகம் என்ற பெயரில் நானே பதிப்பித்த நூல் .தரமான தாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் அச்சிட்ட திருமிகு எம்.எஸ் ஆர் .ரவி சகோதரர் ....அட்டை படத்தை முப்பரிமாணத்தில் எனக்கே தெரியாமல் சிவகாசியில் அச்சிட்டு சஸ்பென்சாக காட்டினார் .

முதலில் இந்த படத்தை தேர்வு செய்த போது இது வேண்டாம்மா ...பெரிதாக்கினால் உடைந்து வரும் என்றார் ...மிகவும் தேடி இணையத்தில் எடுத்த படம் ....ஓவியர் மகேந்திரனிடம் பெரிதாக வரைந்து தாருங்கள் எனக்கேட்டு வாங்கினேன் . பின் அதை சிறிதாக்கி உடையாமல் வரும் என்று அவரிடம் கூற அட்டையாக்கி தந்தார் ....

காரசாரமான கவிதைகள்...அழகியல் தவிர்த்த நேர்மையான கவிதைகள் என்று இதற்கு முன்னுரையும் அணிந்துரையும் எழுதிய கவிஞர் முத்து நிலவன் அவர்களும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் ஒரே மாதிரியான உரையை அளித்த போது மனம் அடைந்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ..

தொட்டாலே எனது குழந்தையை தொடும் உணர்வு ...வேதனையான காலங்களில் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொண்டிருப்பேன் ....சிறுபிள்ளையென...இந்நூல் புதுகை நகர்மன்றத்தில் பெண்கள் மட்டுமே அலங்கரித்த மேடையில் தோழர் பானுமதி அவர்கள் வெளியிட கவிஞர் பாலா அவர்களின் இணையர் திருமிகு மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள் ...

Saturday, 8 July 2017

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

தன குடும்பத்தையே கண்டுக்காமல் சுயநலமாக எல்லோரும் வாழும் காலத்தில் ...

தனது குடும்பம் ,எவ்வளவு பெரிய தொழில் நிறுவனம் இருந்தாலும் அத்தனையையும் விட்டுவிட்டு மக்களுக்கு தங்களால் இயன்ற நன்மையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, வாரந்தோறும் ஒரு மாவட்டத்தில் எந்த வித பலனையும் எதிர்பாராமல் ...

நாங்க நல்லா இருக்கும் நீங்களும் நல்லா இருக்கவே நாங்கள் சேவை செய்கின்றோம் என்று உணவு தூக்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குழு செயல் பட்டுக்கொண்டு இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா?

ஆம் தோழமைகளே ....சிறிய குழுவாக ஆரம்பித்து இன்று நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற குழு தமிழகத்திலிருந்து சர்க்கரை என்ற நீரிழிவு நோயை விரட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்து வருகின்றது ...

இவர்களால் நன்மை அடைந்தவர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளைப் பட்டியல் போட்டு உலகுக்கு அறிவித்துக்கொண்டுள்ளனர் .

நோயாளிகளை குணப்படுத்தி நோயற்றவர்களாக மாற்றினால் வரவேற்க தானே வேண்டும் ஆனால் தனது சுயலாபத்திற்காக சிலர் இக்குழுவைப்பற்றியும் பேலியோ என்ற உணவுமுறைக்குரித்தும் ,முழுமையாக படித்து அறியாமல் தூற்றி வருகின்ற நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது பாதையில் சென்று அனைவருக்கும் பயனை அளிக்கின்ற உணவுமுறையை வழிகாட்டிக்கொண்டுள்ளனர்பேலியோ குழும நிர்வாகிகள் ...

சென்ற மாதம் திருச்சியில் நடந்த பேலியோ மாநாட்டை நடத்திய சகோதரர்வி .சி.வில்வம் தனது கால் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையிலும் மிகச்சிறப்பாக நடத்தி அசத்தினார் ...அங்கு பேலியோ குழுவைச்சேர்ந்த தன்னார்வலர்கள் ...ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அவர்களது பணியைத்திறம்பட செய்தது கண்டு வியப்பாக இருந்தது ...

இத்தனைக்கும் காலையில் கூட்டம் மதியம் அனைவருக்கும் அவர்களுக்கு டயட் சார்ட் தருவது என்ற நிலையில் ...

மதிய உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் தங்களை நாடி வந்த மக்களுக்கு அன்புடன் அவர்கள் அக்கறையாக டயட் சார்ட் கொடுத்த போது ...மிகச்சிறந்த நிர்வாகத்தின் கீழ் சேவையே நோக்கமாக கொண்டு அவர்கள் செயல் படுவதைக்கான்கையில் மனம் நெகிழ்ந்து போனது ..

இந்த உணவு முறை குறித்து சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்கள் முழுமையாக உணர்ந்து நலன் பெற்று வருவதைக்கான்கையில் மனம் மகிழ்கின்றது ..

அவர்களுக்கு எந்த விதத்தில் கைம்மாறு செய்ய முடியும் ...நீங்கள் பெற்ற ஆரோக்கியத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறாமல் கூறிக்கொண்டு அவர்கள் சேவை செய்கின்றனர் ...

முகநூலில் மட்டுமே இயங்கி மக்களுக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்துக்கொண்டு வருகின்றனர் ...அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் ...

Wednesday, 5 July 2017

முதல் நூல்

எனதுமுதல் நூலான

கே ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் "என்ற இளநிலை முனைவர் பட்ட ஆய்வு புத்தகமாக கவிஞர் ஜீவபாரதி அவர்களின் முயற்சியால் எனது தாத்தா தியாகி மாணிக்கம் அவர்கள் பிறந்த "சுந்தரப்பெருமாள் கோவில் "இல் திருமிகு ரெங்க சாமி மூப்பனார் அவர்களால் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .

அந்நூலுக்காக வேலுநாச்சியார் வாழ்ந்த இடங்களுக்குச் சென்ற போது மனம் சொல்ல முடியாத உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தது ...

இன்னமும் அவரை நினைத்தாலே மனம் பெருமிதம் கொள்ளும் ...ஜான்சிரானிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி .வரலாறு மறைத்தாலும் அவள் வெளிப்பட்டு வருவது யாராலும் தடுக்க முடியவில்லை ..அவளையும் சாதி விடாமல் துரத்துகின்றது என்பது தான் வேதனை .

பெண்களுக்கென்று தனிப்படை அமைத்து அதில் குயிலி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தலைமை ஆக்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ...

ஐம்பது வயதில் ஒரு பெண் ஆங்கிலேயரை எதிர்த்து யானை மேல் ஏறி போராடியிருக்கிறாள் என்றால் அவளை எப்படி நாம் கொண்டாடி இருக்க வேண்டும் ...

அவளைப்பற்றி தேடுகையில் ஆங்கிலேயர் எழுதி வைத்த சில வரிகளே ஆதாரமாக கிடைக்கின்றது ...தமிழர் வரலாறை இன்றும் மறந்து புறக்கணிக்கத் தானே செய்கின்றோம் ...

எனது முதல் நூல் வேலுநாச்சியார் பற்றி என்பதில் மிகுந்த பெருமை உண்டு ..எனது வாழ்க்கைக்கு அவரே முன்னோடி ,வழிகாட்டி எனலாம் ...
There was an error in this gadget